சிறுகைத்தொழில்-சாஸ் தயாரிப்பு தொழில்

சாஸ் தயாரிப்பு தொழில் 

‘வ ல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதேபோல கிடைக்கிற பொருள் எதுவாக இருந்தாலும் அதை வைத்து தொழில் நடத்தி லாபம் பார்க்க முடியும் என்பதற்கு சாஸ் தயாரிப்பு எளிய உதாரணம்!
சென்னையில் சாஸ் தயாரிப்பில் முழுவேகத்தில் செயல்பட்டு வரும் ளிபிவிஷி நிறுவனத்தின் சுப்பாராவையும் தியாகராஜனையும் சந்தித்துப் பேசிய போது, சாஸ் தயாரிப்பு வீட்டில் இருந்தே சிறு தொழில் செய்ய ஆசைப்படும் பெண்களுக்கு ஏற்ற வாய்ப்பு என்பது புரிந்தது.
‘‘இருபது ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக ஒரு ஓட்டலில் சுவைத்த சாஸ், எங்கள் ஆர்வத்தைத் தூண்ட, இப்போது தமிழ்நாடு முழுக்க சாஸ் சப்ளை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்’’ என்றார்கள் இருவரும்!
இப்போது பாஸ்ட்ஃபுட் கடை களும், ஓட்டல்களும் பெருகிக் கொண்டே இருப்பதால் மார்க்கெட்டில் சாஸ்களுக்கு டிமாண்ட் குறையவே போவதில்லை. அதனால், நம்பிக்கை யோடு சாஸ் தயாரிப்பில் இறங்கலாம்.
‘ஒரு கிலோவுக்கு அரைலிட்டர் சாஸ்… இதுதான் அளவு! எந்தளவுக்கு சாஸ் தயாரிக்கவேண்டுமோ அதைப்போல இரண்டு மடங்கு தக்காளியை வேகவைத்து, அரைத்து வடிகட்டி, அதோடு சர்க்கரை அல்லது மிளகாய் தூள், உப்பு, வினீகர் போன்றவற்றை சுவைக்கு ஏற்ப சேர்த்து கூடவே, நன்கு அரைத்த வெங்காயம் மற்றும் லவங்கம், பட்டை, கிராம்பு பவுடர் சேர்த்து மீண்டும் வேகவைத்து இறக்கினால் சாஸ் ரெடி! தக்காளியைக் கொண்டே புளிப்பு, காரம், இனிப்பு என பல சுவைகளில் சாஸ் தயாரிக்கலாம்’’ என்றார் சுப்பாராவ்.
தியாகராஜன், ‘‘இதை சிறிய அளவில் செய்யும்போது வீட்டில் வைத்தே தயாரிக்கலாம். தக்காளிப் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து அரைத்துக் கொடுப் பதற்கு மெஷின் உள்ளது. வடிகட்டிய தக்காளி ஜூஸைப் பதமாக வேக வைக்க நீராவிக் கலன் உள்ளது. தக்காளி சாஸை பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து விற்கலாம்.
மூலப்பொருளான தக்காளி உள்ளூரிலேயே கிடைக்கிறது. அதிகளவில் தயாரிக்கும்போது விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்வதாக இருந்தால் இயந்திரங்கள் எதுவும் வாங்கத் தேவையில்லை. வீட்டிலேயே மிக்ஸியில் அரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து தயாரித்துவிடலாம். நமக்கு என்று தனி மார்க்கெட்டை பிடித்துக் கொண்ட பின்னர், இயந்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.
சுப்பாராவ் தொடர்ந்தார். ‘‘உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கு ‘மினிஸ்டரி ஆஃப் ஃபுட் ப்ராஸசிங்’ என்ற மத்திய அரசு அலுவலகத்தில் சான்றிதழ் வாங்க வேண்டும். இவர்கள் லைசென்ஸ் கொடுத்தால் மட்டுமே பெரிய அளவில் தயாரித்து விற்பனை செய்யமுடியும். தயாரிப்பு சாம்பிளை ஆய்வுசெய்த பின்னர், நம்முடைய தயாரிப்பு இடத்தை ஆய்வு செய்ய வருவார்கள். மேலும் சாஸ் தயாரிக்கப் பயன்படுத்தும் தண்ணீரையும் ஃபுட் ப்ராஸசிங் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். எனவே தரக்கட்டுப்பாடு என்பது இதில் மிக முக்கியம்!
தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு அதிக அளவில் இருந்து வரும் நிலையில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கும் ஏக வரவேற்பு இருக்கிறது. சாஸ் தயாரிப்பில் இறங்கும்முன், நம் இடத்தைச் சுற்றி எவ்வளவு ஃபாஸ்புட் கடைகள் இருக்கின்றன, எவ்வளவு ரெஸ்டாரென்ட்களில் சாஸ் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஓர் ஆய்வு செய்யவேண்டும். அவர்களிடம் சாம்பிள் கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். தக்காளியைத் தவிர, பிற காய்கறிகள் விலை குறைவாகக் கிடைக்கும்போது அதை வாங்கியும் சாஸ் தயாரித்து விற்கலாம். குறிப்பாக மிளகாய், சோயா போன்ற பொருட்கள் மூலம் சாஸ் தயாரிக்கலாம்.
வீட்டில் இருந்தே ஒரு நாளைக்கு 50 பாட்டில்களைத் தயாரிக்க முடியும். ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் லாபம் வைத்து விற்றாலும் 300 முதல் 500 ரூபாய் கிடைக்கும். வீட்டுத் தயாரிப்புக்கு வரி பிரச்னை இல்லை. தக்காளி சீசன் சமயத்தில் நிறைய தயாரித்து கொடுத்து பணத்தை அள்ளலாம். மேலும், நம்மூரில் கிடைக்கும் பல்வேறு பழங்களைக்கொண்டு ஜாம், பழச்சாறு முதலியவற்றையும் தயாரித்தும் காசு பார்க்கலாம். வீட்டில் உள்ள குடும்பப் பெண்கள் மிக்ஸியை கூட பயன்படுத்தி சாஸை தயாரிக்கலாம். நன்கு அனுபவம் பெற்றபின் பெரிய அளவில் களமிறங்கிக் காசு பார்க்கலாம்’’ என்றார்.
சாஸ் தயாரியுங்க… ஜமாயுங்க!
http://tholilvaaipugal.blogspot.co.uk/

 

சிறுகைத்தொழில்-புதிய தென்னை கன்றுகளை உருவாக்குதல்

புதிய தென்னை கன்றுகளை உருவாக்குதல்

நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

தென்னையில் ரகங்கள்


தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.
இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது.
ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன.
இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம்.
இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.
இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன.

தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவை

தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும்.இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை.
இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.

வயது

விதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும்.
இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

தென்னங்கன்றுகளை எந்த அளவு குழிகளில் நடவேண்டும்?

தென்னங்கன்றுகளை 3 அடி ஆழம் மற்றும் 3 அடி  அகலம் உள்ள குழிகளில் நடவேண்டும். இதற்கு காரணங்கள் உண்டு. தென்னை மரத்தின் தூர் பகுதியானது அதன் ஆண்டு வளர்ச்சியின் போது ஒரு கனஅடி அளவை பெறுகிறது. இந்த தூரிலிருந்து 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் சல்லி வேர்கள் பக்கவாட்டாக சென்று மரத்தை அசையாமல் தாங்கி பிடிக்கின்றன. இது தவிர இந்த வேர்கள் தினமும் சத்துக்கலந்த 35 மில்லி நீரை உறிஞ்சி மேல் நோக்கி அனுப்புகின்றன.
எனவே, தென்னங்கன்றை நடும் போது 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் ஒரு அடி ஆழத்தில் முன்பு தோண்டி எடுக்கப்பட்ட மேல் மண்ணை நடுப்பகுதியில், வேர்ப்பகுதியில் வேர்களுடன் காணப்படும் சுமார் ஒரு அடி காய்ப்பகுதி இருக்கும் படி கையால் ஒரு அடி குழி எடுத்து காயை அதனுள் பதித்து மண்ணை காலால் மிதித்து விட வேண்டும். பின்னர், வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர்பாய்ச்சி வர வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஒலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில்படாதபடி சுமார் 3 மாதம் பாதுகாக்கலாம்.
நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் சிறிய பெரிய வண்டுகளினால் இளம் தண்டினுள் காணப்படும் குருத்தோலை தாக்கப்படாமலும், கன்றுகள் சாகடிக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆதாரம் : டாக்டர். ஹென்றிலூயிஸ், தென்னைவிஞ்ஞானி. நாகர்கோவில்.
http://ta.vikaspedia.in/agriculture

 

சிறுகைத்தொழில்-பிரியாணி மிக்ஸ்.. பலே லாபம்

பிரியாணி மிக்ஸ்.. பலே லாபம்

பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடி கள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் கூறியதாவது:
கணவர் மற்றும் மகன் ஷார்ஜாவில் பணிபுரிகின்றனர். இங்கு பெற்றோருடன் வசிக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் கணவர் மற்றும் மகனுக்கு பாரம்பரிய உணவுகள் பிடிக்கும். அவற்றை சமைக்க தேவையான பொருட்கள் அங்கு கிடைக்காது. தேடிப்பிடித்து வாங்கினாலும் விலை அதிகம். எளிய முறையில் அவர்கள் சமைக்க ரெடிமேடு சாம்பார், ரசப் பொடி, பாயசம் மிக்ஸ், வெஜிடேரியன், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து கொடுத்து வந்தேன். கணவர், மகனின் வருமானத்தை சார்ந்து இருக்காமல் சுயமாய் சம்பாதிக்க, தொழில் துவங்க எண்ணினேன். தெரிந்ததை தொழிலாக செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்பதால் முதலில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி, சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து விற்றேன்.
பேச்லர்கள், குடும்ப பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பாயசம் மிக்ஸ், சாம்பார், மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகுத்தூள் தயாரித்து விற்றேன். ஒவ்வொரு முறையும் ருசி, தரம் பரிசோதித்த பின்னரே விற்க அனுப்புகிறேன். சுவை, ஆரோக்கியம், குறைந்த லாபம் ஆகியவற்றை லட்சியமாக கொண்டுள்ளதால் நிரந்தர விற்பனை உள்ளது. பெண்கள் தங்கள் சமையல் திறமையை தொழிலாக மாற்றினால் நமது பாரம்பரிய உணவுப் பழக்கம் பல தலைமுறைக் கும் தொடரும். தொழிலும் லாபகரமாக இருக்கும்.
முதலீடு: அரிசி மற்றும் தானிய மசாலா பொருட்களை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்ய கிளீனிங் மெஷின் ரூ.25 ஆயிரம், மசாலா பொருட்களை வறுக்க பிரையிங் மெஷின் ரூ.75 ஆயிரம். அவற்றை பொடியாக்க கிரைண்டிங் மெஷின் ரூ.20 ஆயிரம், அவற்றை பாக்கெட் போட பேக்கிங் மெஷின் ரூ.1 லட்சம் என ரூ.2.2 லட்சம் தேவை.
கட்டமைப்பு : மெஷின்கள் அமைக்க 30க்கு 20 அடி இடமும், பொருள்களை இருப்பு வைக்க ஒரு அறையும், அலுவலக தொடர்புக்கு ஒரு அறையும் போதும்.
மூலப்பொருட்கள் : சீரகசம்பா அரிசி, சேமியா, மல்லி, மிளகாய், மிளகு, மஞ்சள் மற்றும் வாசனைப்பொருள்கள். பலசரக்கு பொருள் கள் விருதுநகரிலும், வாசனைப்பொருட்கள் மதுரையிலும், மிளகு நீலகிரி, கூடலூரிலும் குறைந்த விலையில் கிடைக்கும். அவ்வப்போது நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப மற்ற இடங்களிலும் இந்த பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
உற்பத்தி செலவு: மாதம் தலா அரை கிலோ கொண்ட 2 ஆயிரம் வெஜிடேரியன் மிக்ஸ், 2 ஆயிரம் சிக்கன், மட்டன் பிரியாணி பாக்கெட், ஆயிரம் பாயசம் மிக்ஸ் பாக்கெட்கள் மற்றும் தலா 500 கிலோ மஞ்சள் தூள், மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, 300 கிலோ மிளகாய் தூள் பாக்கெட்கள் தயாரிக்கலாம். இதற்கு மூலப்பொருட்கள் செலவு,6 வேலையாட்கள் சம்பளம், மின்கட்டணம், வாடகை, போக்குவரத்து உள்பட உற்பத்தி செலவுக்கு ரூ.5.7 லட்சம் தேவை.
மாதம் ரூ.85 ஆயிரம் லாபம்
மாதம் உற்பத்தியாகும் ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பொருளுக்கு, உற்பத்தியாளருக்கான லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கிடைக்கும். இதன் மூலம் ரூ.57 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். விற்பனை செய்யப்படும் பாக்கெட்கள் ஸ்டாக்கிஸ்ட்கள் மூலம், டிஸ்ட்ரிபியூட்டர்கள் வழியாக சில்லரை கடைகளுக்கு சென்றடைகிறது. 3 பேருக்கும் தலா 15 சதவீதம் லாபம் வரும் வகையில் கொடுக்கப்படுவதால் மார்க்கெட்டிங் எளிதாகிறது.
10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்கலாம்
சமையல் சுத்தமாய் தெரியாதவர்கள்கூட பேச்லர் பிரியாணி மிக்ஸ் மூலம் எளிதில் 10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்க முடியும். அரை கிலோ பிரியாணி மிக்ஸ் உடன் அரை கிலோ சிக்கனோ, மட்டனோ சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கிவிடவும். இவை 10 நிமிடத்தில் முடிந்துவிடும். பின்னர் நெய் ஊற்றி கிளறினால் சுவையான பிரியாணி ரெடி. சிக்கன், மட்டனுக்கு பதில் காய்கறிகள் (கேரட், பட்டாணி, பீன்ஸ்) பயன்படுத்தினால் வெஜிடேரியன் பிரியாணி தயாராகிவிடும். ரெடிமேடு பிரியாணி மிக்ஸ் சமைப்பதற்கு எளிதாக உள்ளதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.
தயாரிப்பது எப்படி?
வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ், பாயசம், சாம்பார் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் ஆகியவை தயாரிக்கலாம். ஒவ்வொரு பொருள் தயாரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களின் அளவுகள், ஒவ்வொருவரின் கைப்பக்குவத்துக்கும், தனி முத்திரைக்கும் ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளலாம்.
வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ்: மல்லித்தூள், மிளகு, சுக்கு, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கி வெஜிடபிள் ஆயில், சீரக சம்பா அரிசியுடன் கலந்து அரை கிலோ வீதம் பாக்கெட் போட வேண்டும். 6 மாதம் வரை கெடாது. சிக்கன், மட்டன் பிரியாணி மிக்சுக்கும் இதே பொருட்கள், இதே முறை.
பாயசம் மிக்ஸ் : ஜவ்வரிசி, பால்பவுடர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா பருப்பு, ஏலக்காய்  ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி சேமியாவுடன் கலந்து 200 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். 6 மாதம் வரை கெடாது.
மட்டன் மசாலா : மல்லி, மிளகாய்பொடி, சுக்கு, மிளகு, கடுகு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள், சீரகம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். சிக்கன் மசாலாவுக்கு இதே பொருட்களை கூட்டிக் குறைத்து சேர்த்து தயாரிக்க வேண்டும். 
சாம்பார் பொடி: மல்லி, மிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கடுகு, மிளகு, சீரகம், பெருங்காயம், மஞ்சளை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம்.
http://hajamohinudeenhhma.blogspot.co.uk/

 

சிறுகைத்தொழில்-சுய தொழில்கள்-நண்டு வளர்ப்பு,கருவாடு உற்பத்தி:

சுய தொழில்கள்-நண்டு வளர்ப்பு,கருவாடு உற்பத்தி:

சேற்று நண்டு வளர்ப்பு
சேற்று நண்டு
ஏற்றுமதி சந்தையில் அதிகம் தேவையிருப்பதால், சேற்று நண்டு, பிரபலமாகி வருகிறது. வர்த்தக ரீதியாக நண்டு வளர்ப்பு இப்பொழுது ஆந்திரம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் வேகம் பரவி வருகிறது.
சேற்று நண்டின் வகைகள்
கடலோர பகுதிகள், கழிமுகம் மற்றம் உப்பங்கழி ஆகிய பகுதிகளில், சில்லா (Scylla) என்ற வகை சேற்று நண்டுகள் காணப்படும்.
i. பெரிய இனங்கள் :
பெரிய வகை நண்டுகள் வட்டார மொழியில் ‘பச்சை சேற்று நண்டு’ என்ற அழைக்கப்படும்
இவை அதிகபட்சமாக 22 செ.மீ அகலமும், 2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை.
இவை சுதந்திரமாக வாழக்கூடியவை. இவைகளின் கால் போன்ற பகுதிகளில், பல கோண வடிவ வரிகள் காணலாம்.
ii. சிறிய வகைகள்:
சிறிய வகைகள், ‘ரெட் கிளா’ என்று அழைக்கப்படும்
இவை அதிகபட்சமாக 12.7 செ.மீ அகலமும், 1.2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை
இவைகளில் பல கோண வடிவ வரிகள் காணப்படாது. இவை மண் தோண்டும் பழக்கமுடையவை.
இரு வகைகளுக்கும், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தையில் அதிக தேவையுள்ளது.
வளர்ந்த சேற்று நண்டு
வளர்ப்பு முறைகள்
சேற்று நண்டுகளை, இரு முறைகளில் வளர்க்கலாம்
i.குரோ – அவுட் முறை
இம் முறையில் இள நண்டுகள், தேவையான அளவு வளரும் வரை (5-ல் இருந்து 6 மாதம் வரை), வளர்க்கப்படும்.
இம்முறையில், நண்டுகள் வளர்ப்புக்கு, சாதாரணமாக குட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படலாம் அல்லது காணப்படாமலும் இருக்கலாம்.
குட்டையின் அளவு 0.5-லிருந்து 2 ஹெக்டெர் வரை இருக்கலாம். போதுமான வரப்பு மற்றும் கடல் நீர் மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
குட்டை சிறியதாக இருப்பின், வேலிகள் இருக்க வேண்டும். இயற்கையான பெரிய குட்டைகளில், நீர் வெளியேறும் பகுதிகள் வலுவாக பாதுகாக்கப்பட வேண்டும்.
10லிருந்து 100 கிராம் வரை அளவுடைய, இள காட்டு வகை நண்டுகளை விதை நண்டுகளாக வைத்துக் கொள்ளலாம்.
வளர்ப்பு காலம் 3ல் இருந்து 6 மாதங்கள் ஆகும்
ஒரு சதுர மீட்டருக்கு 1-லிருந்து மூன்று நண்டுகள் வரை இட்டு, துணை உணவு அளிக்க வேண்டும்.
பொதுவாக கழிவாகக் கருதப்படும் மீன்களுடன், வட்டாரத்தில் கிடைக்கும் ஏனைய உணவு வகைகள் நண்டுகளுக்கு உணவாக கொடுக்கப்படலாம். (உடல் எடையின் அளவின் 5 % எடை, ஒரு தினத்திற்கு உணவாக கொடுக்கப்பட வேண்டும்)
அடிக்கடி வளரும் நண்டினை எடுத்து, பொதுவான வளர்ச்சி மற்றும் உடல்நலத்தை கண்காணிக்க வேண்டும்.
மூன்றாவது மாதத்திலிருந்து தகுந்த எடையையுடைய நண்டினை அறுவைடை செய்யலாம். இந்த எண்ணிக்கை குறைப்பு மூலம், மற்ற நண்டுகள் நன்றாக வளர வாய்ப்பு உள்ளது.
ii. ஃபேட்டனிங்க (தடிமனாக்கம் ) முறை
மென் ஓடு நண்டுகளை, சில வாரங்கள், வெளி ஓடு தடிப்பு ஆகும் வரை வளர்க்கப்படும். இந்த கடின ஓடுடைய நண்டுகள், வட்டார வாக்கில் சேறு (சதை) என்று வழங்கப்படும். இவை சாதாரன மென் நண்டுகளை விட மூன்றில் இருந்து நான்கு மடங்க விலை அதிகமாக விற்கப்படும்
a. குட்டைகளில் தடிமனாக்கும் முறை
1 – 1.5 மீ நீரின் ஆழம் கொண்ட, 0.025 – 0.2 ஹெக்டர் அளவுடைய கடலோர குட்டைகளில் தடிமனாக்கும் முறையை கையாளலாம்.
விதை மென் நண்டுகளை விடுவதற்கு முன்னர், குட்டையின் அடிப்புற நீரை வடிகட்டி, சூரியனால் உலர்த்தி, தேவையான அளவு சுண்ணாம்பை இட வேண்டும்.
குட்டையின் வரப்பை ஓட்டைகள், விரிசல்கள் இல்லாதவாறு, மொழுக வேண்டும். மதகு பகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இதன் வழியாக தான் நண்டுகள் தப்பிச் செல்லும்.
நுழைவாயில் பகுதியில், வரப்பை, மூங்கில் பாய்க் கொண்டு வலுவூட்ட வேண்டும்.
வரப்பினை மூங்கில் குச்சிகள் மற்றும் வலையினை கொண்டு சரியான முறையில் வேலியிட வேண்டும். நண்டு வெயியேறுவதை தவிர்க்க, இந்த வேலிகள், குட்டையில் உட்புறம் சாய்வலாக அமைய வேண்டும்.
மீனவர்கள் அல்லது நண்டு விற்பவர்களிடமிருந்து, விதை மென் நண்டினை வாங்கி, இதன் அளவை பொறுத்து, ஒரு சதுர மீட்டருக்கு 0.5-லிருந்து 2 வரை இட வேண்டும்.
சந்தையில், 550 கிராம் எடைக்கு மேல் உள்ள நண்டுகளுக்கு கிராக்கி அதிகம். எனவே இவ்வகை நண்டுகளை விதை நண்டாக விடுவது நல்லது. இவ்வாறு விடும் போது ஒரு சதுர மீட்டருக்கு ஒரு நண்டே இட வேண்டும்.
வட்டாரம் மற்றும் நீர் நண்டு கிடைப்பதை பொறுத்து, 6 – 8 தடிமனாக்கும் சுழற்சிகளை கையாளலாம்.
வளர்ப்பு குட்டை பெரியதாக இருப்பின், அதனை வெவ்வேறு பாத்திகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்து, வெவ்வேறு அளவுடைய நண்டினை வெவ்வேறு பாத்திகளில் விட்டு வளர்க்கலாம். இதனால் எளிதாக உணவு அளிப்பது, கண்கானிப்பது, அறுவடை செய்வது முடியும்
விதை நண்டு இடும் இடைவெளி அதிகமாக இருப்பின், ஒரே பாத்தியில் ஒரே மாதிரியான நண்டினை இடலாம்.
ஆண் நண்டு, பெண் நண்டினை தனித்தனி பாத்திகளில் வளர்ப்பதன் மூலம், வலிய ஆண் நண்டின் தாக்குதலை குறைக்க முடியும். பழைய டயர்கள், மூங்கில் கூடைகள் போன்ற தங்குமிடங்களை இடுவதன் மூலமும் தாக்குதல் மற்றும் நண்டே நண்டினை
நண்டு தடிமனாக்கும் குட்டை
நுழைவாயிலை மூங்கில் பாயால் வலுப்படுத்தப்பட்டுள்ளது
“inlets”
b. அடைப்பு பகுதி மற்றும் கூண்டினில் நண்டினை தடிமனாக்கும் முறை
கழிமுக நீர் நிலைகளிலோ அல்லது பெரிய இறால் குட்டைகளிலோ, அடைப்புப்பகுதி, மிதக்கும் வலைக்கூண்டு அல்லது மூங்கில் கூண்டு ஆகியவற்றைக் கொண்டும் நண்டினை வளர்க்கலாம்.
நெட்லான் அல்லது மூங்கில் கம்புகள் கொண்டு வலைகளை உருவாக்கலாம்.
கூண்டின் அளவு 3மீ x 2மீ x 1மீ ஆகும்
வலைகளை வரிசையாக அடுக்குவதன் மூலம் உணவு அளிப்பது மற்றும் பராமரிப்பது எளிதாகம்.
ஒரு சதுர மீட்டர் கூண்டிற்கு, 10 நண்டுகளும், ஒரு சதுர மீட்டர் அடைப்பகுதிக்கு 5 நண்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கூண்டில் அதிகமான நணடுகள் இருப்பதால், நண்டின் கொடுக்கின் நுனியை கிள்ள வேண்டும். இதனால் தாக்குதல் குறைவு ஆகம்.
எனினும், குட்டைகளில் வளர்ப்பது போல் இம்முறை பிரபலம் ஆகபடவில்லை.
குரோ – அவுட் மற்றும் தடினமாக்கும் முறைகளை ஒப்பிடும் போது, தடிமனாக்கும் முறையிலேயே குறைந்த காலத்தில் அதிக இலாபம் கிடைக்கும். இந்தியாவில் நண்டு விதைகள் மற்றும் வர்த்தக ரீதியான உணவு கிடைக்காததால், குரோஅவுட் முறை பிரபலம் அடையவில்லை.
உணவு
Cநண்டுகளுக்கு தினமும் கழிவு மீன், வேகவைத்த கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றால், நண்டின் எடையளவில், 5-8% என்ற விகிதத்தில் உணவு அளிக்கப்படும். ஒரு நாளில், இருவேளை உணவு அளிக்கப்பட்டால், பெரும் பகுதியை சாயங்கால நேரத்தில் அளிக்க வேண்டும்.
நீர் தரம்y
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு நீரீன் தரம் இருக்க வேண்டும்
உப்புத் தன்மை
15-25%
வெப்பம்
26-30 டிகிரி செல்சியஸ்
உயிர் வாயு
> 3 பி.பி.எம்
கார-அமில தன்மை
7.8-8.5
அறுவடை மற்றும் விற்பனை
ஒழுங்காக நண்டின் தடிப்பு தன்மையை கண்காணிக்க வேண்டும்.
அறுவடையை விடியற்காலையிலோ அல்லது சாயங்கால நேரங்களிலோ செய்ய வேண்டும்.
அறுவடை செய்யப்பட்ட நண்டுகளை நல்ல உவர்ப்பு நீரால் கழுவி அழுக்கு மற்றும் சேற்றை நீக்க வேண்டும். அவற்றின் கால்கள் ஒடியாதவாரு அவற்றை கட்ட வேண்டும்.
அறுவடை செய்யப்பட்ட நண்டுகளை ஈரப்பதம் உடைய சூழ்நிலையில் இட வேண்டும். அவற்றை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், சூரிய ஒளி நண்டுகளின் இறப்பை அதிகரிக்கும்
அறுவடை செய்யப்பட்ட நண்டு
கடினமான சேற்று நண்டு
அறுவடைக்கு பின்னர்
நண்டு வளர்ப்பின் பொருளாதாரம் – வருடத்திற்கு 6 வளர்ப்பு – (0.1 ஹெக்டர் கடற்கரையோர குட்டை)
ஆ. வருடத்தின் நிலையான செலவு
ரூபாய்
குட்டை (குத்தகை செலவு)
10,000
மதகு வழி
5,000
குட்டை தயாரித்தல், வேலி அமைத்தல் மற்றும் இதர செலவுகள்
10,000
ஆ. செயல்பாட்டு செலவு (ஒரு வளர்ப்புக்கு)
1. நீர் நண்டின் விலை (400 நண்டுகள், ரூ. 120/கிலோ ).
120/kg)
36,000
2. உணவு செலவு
10,000
3. ஆட்கூலி
3,000
ஒரு வளர்ச்சிக்கு (மொத்தம்)
49,000
6 வளர்ச்சிக்கு மொத்தம்
2,94,000
இ.வருடாந்திர மொத்த செலவு
3,19,000
ஈ. மகசூல் மற்றும் வறுமானம்
ஒரு சுழற்சியில் உற்பத்தியாகும் நண்டு
240 கிலோ
மொத்தம் 6 சுழற்சிக்கு (ரூ. 320/கிலோ)
4,60,800
உ. நிகர வருமானம்
1,41,800
ஒரு சராசரியான குட்டைக்கு (ஒரு சிறு/குறு விவசாயினால் பராமரிக்க படகூடிய), பொருளாதார கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதை விடவும் சிறிய குட்டைகளிலும் வளர்க்கலாம்
நண்டின் அடர்த்தி குறைவு (ஒரு சதுர மீட்ருக்கு 0.4 எண்ணிக்கை) ஏனென்றால் பரிந்துரைக்கப்பட்ட அளவு 750 கிராம் ஆகும்.
முதல் வாரத்தில், நண்டின் எடையில் 10% என்ற விகிதத்தில் உணவும், பின்னர் 5% என்ற விகிதத்தில் உணவு அளிக்க வேண்டும். உணவு வீண் அடையாமல் இருக்கவும் மற்றும் தண்ணீரின் தரம் குறையாமல் இருக்கவும், உணவு தட்டுகளை பயன் படுத்தலாம்.
நன்றாக பராமரிக்கப்படும் குட்டைகளில், 8 முறை வளர்ச்சியை மேற்கொள்ளலாம் (80% – 85% உயிருடன் இருக்கும் நிலையில்) . ஆனால் இந்த கணக்கீட்டில் 75% உயிருடன் இருக்கும் நிலையில், 6 வளர்ச்சியே எடுக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட மீன் பதப்படுத்தும் (கருவாடு உற்பத்தி) முறை
கருவாடு உற்பத்தி என்பது நமது நாட்டின் பழமையான, சிக்கனமான மற்றும் பாரம்பரிய முறையாகும்
இம்முறையில் உள்ள குறைபாடுகள்
பொதுவாக, கருவாடு உற்பத்திக்கு, தரம் குறைந்த மீனை உபயோகிப்பது.
இதில் உபயோகிக்கும் உப்பு, மிக தரம் குறைந்ததாக, மண் மற்றும் அழுக்குடன் இருக்கும். இதனால் இந்த உப்பை உபயோகித்து பதப்படுத்தப்படும் மீன், தரம் குறைந்ததாக இருக்கும்.
மீன் பதப்படுத்தப்படும் பண்ணையில் நல்ல நீர் கிடைப்பது அரிது.
கடலிலிருந்து கொண்டுவரப்படும் மீன்கள், பெரிய சிமெண்ட் தொட்டியில் அடுக்கடுக்காக, உப்பினை நடுவில் இட்டு அடுக்கப்படும். இடமும் சுத்தமாக இருக்காது. இப்படி தொட்டிகளில் இரண்டு அல்லது மூன்று தினங்கள் வைத்த பின்னர், கடற்கரையில் திறந்த வெளியில், சூரியனில் உலர்த்தப்படும். இப்படி வைக்கும் பொது, நிறைய மணல் மீன் மேல் ஒட்டிக் கொள்ளும். பின்னர் குவித்து வைக்கப்படும்.
இப்படி பதப்படுத்தப்படும் மீன், சிகப்பு ஹலோபிலிக் பாக்டீரியாவால் மாசுபடுவதனால், இரண்டிலிருந்து மூன்று வாரம் மட்டுமே, பதப்படுத்திய மீனை சேமிக்கலாம்.
கேரள மாநிலம், கலிக்கட்டில் உள்ள, மத்திய மீன் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், தரமான பதப்படுத்தப்பட்ட மீன் தயாரிப்புக்கு, சில முறைகளை வகுத்துள்ளது. அவற்றின் குறிப்புகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
முறை
புதிய மீன் கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட பின்பு, உடனடியாக சுத்தமான கடல் நீரில் கழுவி, மீன் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும், அழுக்கு மற்றும் ஏனையவற்றை நீக்க வேண்டும்.
இவைகளை பின்னர் பதனிடும் இடத்திற்குச் எடுத்துசென்று, மிக கவனமாக சுகாதாரம் மற்றும் தரத்தை பேன வேண்டும். வழக்கமான முறையை போல் அல்லாமல், ஏனைய பதனீட்டு செயல்பாடுகளை, மேஜைகள் மேல், மேற் கொள்ள வேண்டும். இதனால் அழுக்கு, மணல் போன்றவைகளால் மாசுபடுவது கட்டுப்படுத்தப்படும்.
10% குளோரின் அளவு கொண்ட நீரை சுத்தப்படுத்த பயன்படுத்துதல் நல்லது.
பதனிடப்படும் மேஜைகளில், மீன்கள் உள்உடலுறுப்புகளை நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். Êசார்டீன் போன்ற மீன்களில், பதப்படுத்தப்பட்ட பொருளின் தோற்றத்தை மேம்படுத்த, செதில்களை நீக்கலாம். நீக்கப்பட்ட உடலுறுப்புகள், மேஜையின் கீழ் வைக்கப்பட்ட கழிவு கூடையில் உடனே போடப்பட வேண்டும். உள்உடலுறுப்புகளை நீ்க்குவது சாத்தியமற்ற சிறிய மீன்களை, நன்றாக சுத்தம் செய்த பின்னர் நேரடியாக உப்பில் இட வேண்டும்.
இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட மீன்களை, நல்ல நீரில் கழுவி, நீரை வடிகட்ட வேண்டும். இதை ஜல்லடை போன்ற அமைப்பையுடைய பிளாஸ்டிக் பாத்திரத்தில் எளிதாக செய்யலாம்.
நன்றாக வடிகட்டிய பின்னர், மீனை உப்பிடும் மேஜைக்கு எடுத்துச் சென்று, தரமான உப்பை ஒழுங்காக கையினால் இட வேண்டும். இதை இடும் வேலையாட்களின் கை, சுத்தமாக இருக்க வேண்டும். பொதுவாக மீன் மற்றும் உப்பின் விகிதம் 1:4 என்ற முறையில் இருக்க வேண்டும்.
உப்பு நேர்த்தி முடிந்தவுடன், மீனை சத்தமான சிமெண்ட் தொட்டியில் குறைந்தது 24 மணி நேரம் அடுக்கி வைக்க வேண்டும். பின்னர் மீனை வெளியில் எடுத்து, மேலே ஒட்டியுள்ள உப்பு கட்டிகள் நீங்கும் பொருட்டு, நீரினால் கழுவ வேண்டும்.
இவ்வாறு உப்பிடபட்ட மீன்கள், சுத்தமான உலர்த்தும் மேடைகளில் உலர்த்தப்பட வேண்டும். மேடைகளானது, உயர்த்தப்பட்ட சிமெண்ட் மேடை அல்லது மூங்கில் தட்டிகளாகவோ இருக்கலாம். இவை இல்லையென்றால், மீனை மூங்கில் பாயிலும் உலர்த்தலாம்.
ஒவ்வொரு தருணத்திலும், சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
பயன்படுத்தப்படும் பாதுகாப்பு வேதிப் பொருள்கள்
இந்த முறையில் பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கு, கால்சியம் புரோபியோனேட் மற்றும் தூள் உப்புக் கொண்ட கலவையை தூவ வேண்டும்.
இந்த கலவையை மூன்று பகுதிகள் கால்சியம் புரோபியோனேட் மற்றும் 27 பகுதிகள் தூள் உப்புக் கொண்டு, உடனுக்குடன் தயாரித்துக் கொள்ளலாம்.
மீனின் அனைத்து பரப்புகளிலும், ஒரே சீராக படும்படி கலவையை இட வேண்டும்.
பொதுவாக 1 கிலோ கலவையைக் கொண்டு 10 கிலோ மீனுக்கு தூவலாம்.
இதன் பின்னர், உதிரி விற்பனைக்கு குறிப்பிட்ட அளவினை எடையிட்டு, பாலீதீன் பைகளில் அடைக்கலாம். மொத்த விற்பனைக்கு, பாலீதீன் இழையிடப்பட்ட, சாக்குகளில் அடைக்கலாம். இவ்வாறு பாக்கேஜ் செய்யப்படுவதால், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போது, பதப்படுத்த்ப்பட்ட மீன் அதிகமாக உலர்வது தடுக்கப்படும். மேலும், பாதிப்பு உருவாக்ககூடிய பாக்டீரியாவில் இருந்தும் பாதுகாக்கப்படும்.
Êசமைப்பதற்கு முன்னர், மீனை நீரில் ஈடும் போது, உப்புடன் சேர்ந்து, இந்த கவவையும் நீக்கப்படும்.
எனவே பதனிட்ட மீனை நீன்ட நாள் வைப்பதற்கு மிக எளிய, பாதுகாப்பான மற்றும் தரமான முறையாகும்.
இவ்வாறு பாதுகாக்கப்பட்ட மீனை குறைந்தது, எட்டு மாதம் வரை நல்ல நிலையில் வைத்து இருக்கலாம்.
இம் முறையின் சிறப்புகள்
இம்முறை மிக எளிய மற்றும் சராசரி மனிதனாலும் எளிதாக கையாளபடக்கூடிய முறை.
இது கொடிய பாக்டீரியாவில் இருந்து மீனை பாதுகாப்பதால், பதனிடப்பட்ட மீனின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தும்.
மீனின் நிறம், வாசனை மற்றம் சுவையை, கால்சியம் புரோபியோனேட் எந்த வகையிலும் பாதிக்காது.
மற்ற முறைகளுடன் ஒப்பிடும் போது மிக மலிவான முறையாகும். சேமிப்பு காலம் அதிகரிப்பு மற்றும் அதிக விலை கிடைத்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், இம்முறைக்கு ஆகும் தயாரிப்புச் செலவு மிகுதி, மிக குறைவாகும்

 

சிறுகைத்தொழில்-எரிகட்டி தொழில் தொடங்க முழு விவரம்

எரிகட்டி தொழில் தொடங்க முழு விவரம்

எரிகட்டி தொழில் தொடங்க முழு விவரம்
செயற்கையைவிட இயற்கைதான் ‘சீப் அண்ட் பெஸ்ட்’ என்பதற்கு சிறந்த உதாரணம் எரிகட்டி (Fuel Briquettes). அதிகரித்து வரும் கேஸ் விலையேற்றம் அனைத்துத் தரப்பு மக்களையும் கலக்கமடைய செய்திருக்கிறது. இந்த பிரச்னைக்கு அருமையானதொரு தீர்வாக உருவெடுத்திருக்கிறது எரிகட்டி தயாரிப்பு.
குறைந்த அடர்த்தியிலான (Density) பயோமாஸை அதிக அடர்த்திக்கு மாற்றி எரிசக்தி தருவதே இதன் சிறப்பு. வீண் என வீசி எறியப்படும் பொருட்களை கொண்டே தயார் செய்யப்படுகிறவை இந்த எரிகட்டிகள் என்பதால் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, நம் நேரத்தையும், எரிசக்தியையும் மிச்சப்படுத்துகிறது.
மூலப் பொருட்கள்:
தேவையற்ற வேஸ்ட் பேப்பர்கள் மற்றும் கார்டு போர்டுகள், மரங்களிலிருந்து உதிரும் இலைகள், புளியின் மேல் ஓடு, கடலைத்தோல், புற்கள், வைக்கோல்கள், மரத்தின் அடிபாகங்கள், கரித்துண்டுகள், மரத்தூள் போன்ற பொருட்கள்தான் இத்தொழிலுக்கான மூலப் பொருட்கள். மூலப் பொருட்களை காய வைக்க வெயில் மிகவும் தேவைப்படும். குளிர் பிரதேசங்களில் ஆரம்பிக்க இயலாத தொழில். பெரும்பாலும் விவசாயம் சார்ந்த கழிவுப் பொருட்களே பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு முறை:
மூலப் பொருட்களை நன்கு காய வைத்து, சரியான விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இது 4,500 கலோரி வெப்பத் தரத்தை கொடுக்கும் அளவில் இருக்க வேண்டும். இயந்திரத்தில் கொடுத்தால் 60, 90 டயாமீட்டர் என தேவையான அளவில் குழாய் புட்டு வடிவத்தில் எரிகட்டி கிடைத்துவிடும். இதனை அப்படியே பேக்கிங் செய்தால் விற்பனைக்குத் தயார்.
கட்டடம்:
இந்த எரிகட்டியைத் தயாரிக்க 2,500 சதுர அடி இடம் தேவை. எரிகட்டி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப் பொருளை காய வைக்க 25-30 சென்ட் இடம் தேவை. இந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இடம் சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு.
இயந்திரம்:
இத்தொழிலுக்கான இயந்திரத்தின் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், பவானி, சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது. இயந்திரத்தைப் பயன்படுத்துவதும் சுலபம். ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டால் போதுமானது.
மானியம்:
எரிகட்டித் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் உண்டு. முதலீட்டுத் தொகையில் 35% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். நேரடியாக கையில் கொடுக்க மாட்டார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு வங்கிக் கடனில் கழித்துக் கொள்வார்கள். வங்கியில் மானியத் தொகை இருப்பு இருக்கும் வரை, அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை.
சந்தை வாய்ப்பு:
அதிகரித்து வரும் எரிவாயு விலையேற்றத்தால் மாற்று எரிபொருளைத் தேடி மக்கள் ஓடும் காலமிது. பெரிய பெரிய பாய்லர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள், டீ எஸ்டேட்கள், டீக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் அடுப்புகளை நம்பி இருக்கின்றன. இந்த அடுப்புகள் எறிய வேண்டுமெனில், விறகு மற்றும்
மூன்றாம் தர நிலக்கரியைப் பயன்படுத்தியாக வேண்டும். இவற்றின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தவிர, வேறு இடங்களிலிருந்து இதை கொண்டு வருவதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. குறைந்த செலவில் அதிக எரிசக்தி தருவது இந்த எரிகட்டியின் ஸ்பெஷல் அம்சம். இரண்டு கிலோ விறகு எரிப்பதன் மூலம் கிடைக்கும் எரிசக்தி, ஒரு கிலோ எரிகட்டியை எரிப்பதன் மூலம் கிடைக்கிறது. தவிர, இவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்பதால், தற்போது இதற்கான சந்தை வாய்ப்பு பெருகி வருகிறது. பெண்கள் எளிதாக இத்தொழிலை செய்ய முடியும் என்பது இத்தொழிலில் இருக்கிற இன்னொரு ஸ்பெஷாலிட்டி.
வேலையாட்கள்:
மூலப்பொருட்களைக் காய வைக்க, இயந்திரத்தை இயக்க, பேக்கிங் செய்ய என இங்கே கொடுக்கப்பட்டுள்ள உற்பத்தித்திறனுக்கு மொத்தம் இருபது நபர்கள் தேவைப்படுவார்கள்.
சூப்பர்வைசர் – 1
திறமையான வேலையாட்கள் – 5
சாதாரண வேலையாட்கள் – 14
மின்சாரம்:
ஒரு நாளைக்கு முழு உற்பத்தித் திறன் பயன்பாட்டிற்கு 504 யூனிட்களுக்குமேல் மின்சாரம் தேவைப்படும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து மணிநேரம் இயந்திரத்தை இயக்க வேண்டி வரும்.
பிளஸ்:
மாற்று எரிபொருளுக்கானத் தேவை அதிகரித்து வருவது இத்தொழிலுக்கு நல்ல வாய்ப்பு. மேலும், காடுகளை அழித்து விறகுகள் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்யும் பட்சத்தில் எரிகட்டிக்கானத் தேவை மேலும் அதிகரிக்கும்.
ரிஸ்க்:
தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மரம் அறுக்கும் மில்களில் இருந்து மொத்தமாக மரத்தூளை வாங்கி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை எனில் அண்டை மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். எனவே, இந்த தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் மூலப் பொருட்கள் எனவே, இந்த தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் மூலப் பொருட்கள் கிடைக்கும் வழிகளைப் பற்றி தெரிந்து கொண்டு பிறகு இறங்கவும்.
மார்க்கெட்டிங்:
அலைந்து திரிந்து ஆட்களைப் பார்க்க வேண்டும் என்பதைவிட, எரிகட்டி தயாராகத் தயாராக உடனடியாக வாங்கிக் கொண்டு போகும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கூடுதலாக சந்தை வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு சென்று எரிகட்டியின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூறி ஆர்டர்களை பெறலாம்.
சுய உதவிக் குழுப் பெண்களும், கிராமப்புற இளைஞர்களும் இந்த தொழிலில் சுலபமாக இறங்கலாம்


LikeShow More Reactions

 

சிறுகைத்தொழில்-மெழுகுவர்த்தி தயாரிப்பில் ஜொலிக்குது லாபம்

மெழுகுவர்த்தி தயாரிப்பில் ஜொலிக்குது லாபம்

மெழுகுவர்த்தி தயாரிக்கும் கலை பழமையானது. அன்று தொடங்கி இன்று வரை மெழுகுவர்த்திக்கு மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி உள்ளது. வழிபாடு, மின்தடை நேரங்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது மெழுகுவர்த்தியை தான். எனவே இதை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் வாழ்வே வெளிச்சமாகும்‘ என்று கூறுகிறார் ஈரோடு ‘அம்மன் கேண்டில் ஒர்க்ஸ்‘ உரிமையாளர் மகேஸ்வரி. அவர் கூறியதாவது: குறைந்த முதலீட்டில் எளிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். மெழுகுவர்த்தி தயாரித்து விற்கலாம் என முடிவு செய்து 10 நாட்களில் தொழிலை கற்றுக்கொண்டேன்.
படிப்படியாக தொழிலில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன். முதலில் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைகளில் ஆர்டர்கள் பெற்று அதற்கேற்ப தயாரித்து விற்றேன். படிப்படியாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உள்பட பல்வேறு இடங்களில் விற்க துவங்கினேன். தொழில் விரிவடைந்ததோடு நல்ல வருமானமும் கிடைத்தது. பிறகு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினேன். தற்போது பல பெண்கள் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். வீட்டில் உள்ள பெண்கள் இத்தொழில் மூலம் தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
இதில், வேலைப்பளு குறைவு. குறைந்த முதலீடு, இட வசதி போதுமானது. ஒருவர் மட்டும் உழைத்தாலே போதும். வீட்டிலேயே இதை நல்ல முறையில் நடத்த முடியும். தினமும் குறைந்தது 5 கிலோ, அதிகபட்சம் 25 கிலோ மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும். இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது.  ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.
பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை. இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.
என்னென்ன தேவை?
பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.
தயாரிக்கும் முறை
கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும். சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.
வெள்ளை கலரில் மட்டுமல்ல; எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில் சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும்.
ரகங்கள்
லோக்கல், வெள்ளை, கலர், கப், சிலை, ஜெல் என ஏராளமான வகைகளில் மெழுகுவர்த்திகள் உள்ளன. லோக்கல் என்பது நீளமாக இருக்கும் மெழுகுவர்த்தியை குறிக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் அச்சுகள் உள்ளது. அவற்றின் மூலம் பல்வேறு வகைகளில் தயாரிக்கலாம்.
முதலீடு
1 கிலோ மெழுகு தற்போது கடைகளில் ரூ.95க்கு விற்கப்படுகிறது. அச்சு வாங்க ரூ.500, டிரே ரூ.100, தேவையான எரிபொருள், பக்கெட் ரூ.50, காட்டன் நூல் (திரி) ஒரு கிலோ ரூ.120, கை மெஷின் ரூ.300. எடை போடுவதற்கான எலக்ட்ரானிக்ஸ் தராசு ரூ.400 என மொத்தம் ரூ.1,600 இருந்தால் போதுமானது.
வர்த்தக வாய்ப்பு
உற்பத்தி செய்த மெழுகுவர்த்திகளை மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகி ஆர்டர்கள் பெற்று விற்கலாம். மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தனியே கடைகளும் உள்ளன. சர்ச்களிலும் ஆர்டர்கள் பெற முடியும்.
வருமானம்
ஒரு கிலோ மெழுகு ரூ.95க்கு கடைகளில் கிடைக்கிறது. இதை மெழுகுவர்த்தியாக தயாரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்கலாம். பெரும்பாலும் கடைகளுக்கு கிலோ கணக்கில் மட்டுமே விற்கப்படுவதால் ஒரு கிலோ விற்றால் ரூ.25 லாபம் கிடைக்கிறது. திரி தயாரிக்க பயன்படும் காட்டன்நூல், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவும் குறைவு. ஒரு நாளைக்கு சாதாரணமாக 20 கிலோ வரை மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம். ஒரு கிலோவுக்கு ரூ.25 லாபம் கிடைக்கிற நிலையில் 20 கிலோவுக்கு ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. பேக்கிங் செலவு, பாலிதீன் கவர்கள், காட்டன் நூல் செலவு உள்ளிட்டவற்றை கழித்தால் ரூ.450 வரை உறுதியாக லாபம் ஈட்ட முடியும். ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்தால் மாதம் ரூ.13,500 வரை லாபம் ஈட்ட முடியும்.
டிப்ஸ்: திரி மூழ்காதவாறு தண்ணீரில் வைத்தால், 2 மணி நேரம் எரியும் மெழுகுவர்த்தி 3 மணி நேரம் எரியும்.
















http://suya-tholilkal.blogspot.co.uk/search/label/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

சிறுகைத்தொழில்-மீன் வளம் – ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு

மீன் வளம் – ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு

Add caption

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் எளிதில் கிடைக்கின்றது. அதோடு வயலிற்கு எருவாக மீன்களின் கழிவுகள் பயன்படுகின்றன.
பண்ணை (வயலின்) குளங்களில் மீன் வளர்க்கலாம். அதேபோல் கரை ஓரங்களில் வாத்துக்களை மேய விடலாம். வயல் ஓரங்களில் காய்கறி மற்றும் பழ மரங்களை விதைக்கலாம். இதனால் நமக்கு முட்டை, இறைச்சி, உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவை கிடைக்கும். இதனால் நல்ல சரிவிகித உணவு கிடைப்பதோடு பொருளாதார அளவிலும் அதிக இலாபம் ஈட்ட முடிகிறது.
குளங்களில் வாத்து வளர்த்தல், பயிர்கழிவுகளை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துதல், மேலும் கால்நடை கழிவுகளை பயிர்களுக்கு உரமாக்குதல் போன்ற சுழற்சி முறைப் பயன்பாடே ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பாகும். இது சிறந்த வேலைவாய்ப்பை அளிப்பதுடன், கிராமப்புற வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.
ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் இரண்டு முறைகள் உள்ளன. 1) வேளாண் பயிர் செய்தல் – மீன் வளர்ப்பு, 2) மீன் வளர்ப்பும் கால்நடைப் பராமரித்தலும்.
வேளாண் பயிர் சாகுபடி  மீன் வளர்ப்பில் நெல் – மீன் வளர்ப்பு, தோட்டக்கலை – மீன் வளர்ப்பு, காளான் – மீன் வளர்ப்பு, பட்டுப்புழு – மீன் வளர்ப்பு போன்ற முறைகள் அடங்கும்.
இதேபோல் கால்நடை – மீன் வளர்ப்பில், மாடுகளுடன் – மீன் வளர்ப்பு, பன்றியுடன்  மீன் வளர்ப்பு, கோழி – மீன் வளர்ப்பு, வாத்து – மீன் வளர்ப்பு, ஆடு – மீன் வளர்ப்பு, முயல் – மீன் வளர்ப்பு.

வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு

நெல், வாழை, தென்னை போன்ற வேளாண்  பயிர்களுடன் சேர்த்து மீன் வளர்ப்பது இரட்டிப்பு பலன் தரும்.

நெல் வயலில் மீன் வளர்ப்பு

இந்தியாவில் 6 மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் பயிர் செய்யப்பட்டாலும், 0.03% மட்டுமே நெல் – மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. இம்முறையில் பல நன்மைகள் காணப்படுகின்றன. அவை
  • குறைந்தளவு நிலத்திலும் அதிக பொருளாதாரப் பயன்பாடு.
  • அதிக ஆட்கூலி தேவைப்படுவதில்லை.
  • களையெடுப்பு மற்றும் மீன்களுக்கு உணவளித்தல் போன்ற செயல்களுக்கான ஆட்கூலி தேவை மிச்சமாகும்.
  • அதிக நெல் விளைச்சல்.
  • விவசாயிக்கு வயலிலிருந்து நெல், மீன் மற்றும் வயல்வெளி ஓரங்களில் வெங்காயம், பீன்ஸ், போன்றவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே நமது நாட்டில் நெல்வயலில் மீன் வளர்க்கும் முறையை அதிகப்படுத்துதல் வேண்டும்
நெல் வயலில் 3 – 8 மாதங்கள் வரை நீர் தேங்கி இருக்கும். நெற்பயிர் அறுவடை முடிந்தபின் மீதமிருக்கும் நீரில் உள்ள மீன்கள் பயிரில்லாத காலத்தில் விவசாயிக்குக் கூடுதல் இலாபம் அளிக்கும். இதற்கு வயலில் சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
வட்டவடிவ குழிகள் தோண்டி கரைகள் கட்ட வேண்டும். குளம் போன்று உருவாக்கியபின் அதில் ஹெக்டருக்கு 10000 வரை மீன்குஞ்சுகளை விட வேண்டும். அவற்றிற்கு உணவாக அரிசி – உமி புண்ணாக்குகள் 2 – 3% உடல் எடைக்கு ஏற்றவாறு அளிக்கலாம்.
இவ்வாறு மீன் வளர்ப்பிற்கு ஏற்றவாறு பனிதன், துளசி, சி.ஆர் 260 77, ஏ.டி.ட்டி – 6,7, ராஜராஜன் மற்றும் பட்டம்பி 15,16 போன்ற நெல் இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இரகங்கள் நீர்த்தேக்கத்திலும் நன்கு வளரக் கூடியவை. அதோடு இதன் வாழ்நாள் 180 நாள் வரை இருப்பதால் மீன்வளர்ப்பை நாற்று நட்டபின் ஆரம்பிக்கச் சரியான தருணமாகும். மீன்கள் விற்பனைக்கு உகந்த  அளவு எடைக்கு வந்த பின்பு அறுவடை செய்து விற்றுவிடலாம்.

ricefish

நெல் வயலில் மீன் வளர்ப்பு
நெல்வயலில் மீன் வளர்ப்பு இரு முறைகளில் செய்யப்படுகிறது.
  • சம காலத்தில் (ஒரே காலத்தில்) இரண்டையும் வளர்த்தல்
  • சுழற்சி முறை வளர்ப்பு
சமகால வளர்ப்பு முறை
இதற்கு 0.1 ஹெக்டர் பரப்பளவு நிலமே  போதுமானது. இதை நான்கு 250மீ2 (25 x 10 மீ) உள்ள பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியும் 0.75 மீ அகலமும், 0.5 மீ ஆழமும் கொண்ட குழி (அகழி) தோண்ட வேண்டும். இந்த அகழி வைக்கோல் பதியவைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும். 0.3மீ அகலம் கொண்ட நெல் வயலைச் சூழ்ந்திருக்க வேண்டும். இந்த அகழி இருபுறமும் சிறு வாய்க்காலால் இணைக்கப்பட வேண்டும். சல்லடை அடைப்புடன் கூடிய சிறிய மூங்கில் தண்டினை (து) வாய்க்கால் அகழியுடன் சந்திக்குமிடத்தில் வைக்க வேண்டும். இதனால் மீன்கள் வெளியேறாமலும், சிறு மீன்களை விழுங்கும் பெரிய மீன்கள் உட்புகாமலும் பாதுகாக்க இயலும். இந்த அகழிகள் நெற்பயிர் இல்லாத சமயத்தில் மீன்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் குறையும் சமயத்தில் சேகரித்து வைக்கவும் உதவும். வளர்க்கும் மீன் வகையின் அளவு மற்றும் பயிரிடும் நெல் இரகத்தைப் பொறுத்து   பராமரிக்கும் தண்ணீரின் அளவு மாறுபடும்.
இவ்வாறு நெல் வயலில் வளர்க்கப்படும் மீனானது குறைந்த ஆழத்தில் மேலேயே வளரக் கூடியதாகவும், 350 செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அதோடு குறைந்த ஆக்ஸிஜனும் அதிக கலங்கல் தன்மை உள்ள நீரில் வளரும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். கட்லா, ரோகி, மிர்கல், கார்ப்போ, முகில், சானோஸ், மொசாம்பிக்ஸ் போன்ற
நெல் வயலில் நன்னீர் இறால் சமகால வளர்ப்பு
நெல் வயல்களில் மேக்ரோ பிராச்சியம் ரோசன் பெர்ஜி என்ற இறால் வகைகளை மித தீவிர முறையில் வளர்க்கலாம். மீன்களைப் போலன்றி இறால் வளர்ப்பிற்கு 4 மாதத்திற்கு 12 செ.மீ ஆழத்திற்கு வெளியே செல்லும் நீருக்கு மூங்கில் தண்டில் சல்லடைத் தடுப்பு அமைத்துப் பாதுகாக்க வேண்டும். இறால் குதித்து வெளியே எங்கும் ஓடிவிடாமல் இருக்க 0.3 மீ நீருக்கு மேலே மடை போல் தடுப்பு கட்ட வேண்டும். அருகில் ஓரிரு சிறிய குழிகள் (1 x 2 x 0.5 மீ) வெட்டி வைத்தால் பழைய நீரை வடிக்கும்போதும் இறால் அறுவடை செய்யும்போதும் இறால்கள் தப்பிக்காமல் இருக்க உதவும். நாத்து நட்டு வேர்பிடித்தபின் ஒரு ஹெக்டேருக்கு 2 – 3 செ.மீ அளவுடைய 1000 குஞ்சுகள் என்ற விகிதத்தில்  வயலில் விட வேண்டும்.

பயன்கள்

  • மீன்கள் நெற்பயிரின் உற்பத்தியை 5 – 15 சதம் அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில் மீன்களின் கழிவுகள் பயிருக்கு அங்கக உரமாகப் பயன்படுகிறது
  • மீன்கள் வயலில் உள்ள பச்சைப் பசும் பாசிகள் (ஆல்காக்கள்) உண்டு விடுவதால் அவை நெற்பயிருடன் ஊட்டச்சத்துக்காகப் போட்டியிடுவது தடுக்கப்படுகிறது.
  • திலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை  போன்ற மீன்கள் தேவையற்ற நீர்க் களைகளை உண்டு விடுகின்றன. இதனால் 80% நெல்லின் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
  • முரல்ஸ், கேட்ஃபிஷ் போன்ற மீன்கள் நெற்பயிரின் தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகளை உண்டு விடுகின்றன.
  • மீன்கள் மனிதர்களுக்கு மலேரியா மற்றும் பல  நோய்களை ஏற்படுத்தும் கொசு போன்ற உயிரிகளை உண்டு விடுவுதால் நோய்ப்பரவல் குறைக்கப்படுகிறது.
  • நெல் வயலில் வளர்ந்த மீன்களை விற்றுவிடலாம் அல்லது அடுத்த வயலில் விட்டு கூட்டு மீன் வளர்ப்பில் வளரச் செய்யலாம்.
குறைபாடுகள்
  • நெற்பயிருக்கு பூச்சி நோய் மற்றும் களைக் கட்டுப்பாட்டிற்கு இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறையில் இயலாது.
  • மீனின் வளர்ச்சியை யொட்டி அதிக அளவு நீரைத் தேக்கி வைத்தல் என்பது எப்போதும் சாத்தியமாகாது.
  • புல் கெண்டை போன்ற புல்திண்ணி மீன்கள் நெற்பயிரையும் உண்ண வாய்ப்புள்ளது.
  • திலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை  மீன்கள் நெற்பயிரின் வேரினைப் பிடுங்கி விடக்கூடும்.
எனினும் முறையான பராமரிப்பின் மூலம் இக்குறைபாடுகளைச் சரிசெய்து விட முடியும்.

வளர்ப்பு முறை
நடவு செய்த 5 நாட்களுக்குப் பிறகு நுண் மீன்குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 5000 எண்ணிக்கையிலும் , விரலளவு மீன் குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 2000 எண்ணிக்கையிலும் வயலினுள் விட வேண்டும். சரியாக உணவளித்தால் குறிப்பாக போதிய அளவு மிதவைத் தாவரங்கள் இருப்பின் விரைவில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். வழக்கமாக நெற்பயிருக்கு அளிக்கும் அளவை விட சற்று அதிகமாக உரமளித்தால் மிதவை உயிரிகள் நன்கு வளரும். பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்த ஃபுயூரான் 1 ஹெக்டருக்கு 1 கிலோ என்ற விதத்தில் அளிக்கலாம். இதை அடி உரத்துடன் கலந்து இட்டு, பின் நிலத்தைச் சமப்படுத்தி விட வேண்டும்.
நுண் மீன் குஞ்சுகளை வயலில் விட்ட பின் 10 வாரங்களுக்குப் பின்பும் விரலளவு மீன் குஞ்சுகளாக இருப்பின் 6 வாரங்களுக்குப் பிறகும் நீரை வடித்து விட்டுப் பின் அறுவடை செய்யலாம். நெற்பயிரை அறுவடை செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு மீன்களை சேகரித்துவிட வேண்டும். மிதவை உயிரிகளை உண்டு வாழ்வதால் மீன் உற்பத்தியும் அதிகளவில் இருக்கும். இம்முறை வளர்ப்பில் ஒவ்வொரு மீனும் 60 கிராம் எடையுடன் ஹெக்டருக்கு 500 கிலோ வரை கிடைக்கும்.

சுழற்சிமுறை வளர்ப்பு

இம்முறையில் மீன் மற்றும் நெல் அடுத்தடுத்து பயிர் செய்யப்படுகிறது. நெற்பயிரை அறுவடை செய்தபின் அவ்வயல் மீன் வளர்க்கும் குளமாக மாற்றப்படுகிறது. இம்முறையில் முக்கிய பயன் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் இயலும். அதோடு மீன்களுக்கு தேவையான அளவு 60 செ.மீ வரை நீரின் ஆழத்தைப் பராமரிக்க இயலும்.
நெற்பயிர் அறுவடை முடிந்த ஓரிரு வாரங்களில் வயலை மீன் வளர்ப்புக்குத் தயார் செய்ய வேண்டும். கெண்டை  இன மீன் வகைகள் இம்முறைக்கு மிகவும் ஏற்றவை. 2 -3 செ.மீ அளவுள்ள நுன்குஞ்சுகளாக இருப்பின்  ஹெக்டருக்கு 20000 குஞ்சுகளும், விரலளவு குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டருக்கு 6000 குஞ்சுகளும் குளத்தில் விட வேண்டும். 10 வாரங்களுக்குப் பிறகு நுண்மீன் குஞ்சுகளையும், விரலளவு குஞ்சுகளை 6 வாரங்களுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம். ஒரு மீனின் வளர்ச்சி சுழற்சி முறையில் 100 கிராம் வரையிலும் உற்பத்தி அளவு ஹெக்டருக்கு 2000 கி.கிமும் கிடைக்கும். நல்ல விலை கிடைத்தால் மீன் வளர்ப்பில் நெற்பயிரில் கிடைக்கும் இலாபத்தை விட அதிக லாபம் கிடைக்கும்.

நெல் – மீன் வளர்ப்பு முறை

கடற்கரை ஒட்டிய டெல்டாப் பகுதிகளில் மழைக் காலங்களில் மட்டுமே வருடத்திற்கு ஒரு முறை நெல் பயிர் செய்வர். ஏனெனில் மழைக்காலங்களில் மட்டுமே இப்பகுதியில் உப்பின் அளவு சற்று குறைவாக இருக்கும். மற்ற காலங்களில் அதிக உப்புத்தன்மையினால் பயிரேதும் பயிரிட முடியாமல் வயல்கள் வெற்று நிலமாக விடப்படும்.
அது போன்ற பகுதிகளில் காரிஃப் பருவத்தில் மரூரி, சடமோட்டா, கலோமோட்டா, தால்முகர், தாமோதர், தசல், கேட், ஜெயா, சத்னா, பன்கஜ், பட்னை – 23, லுனி, பொக்காளி, கட்டக்தன்டி, வைட்டிலா, பிலிகாகா, சி.எஸ்.ஆர் – 4, சி.எஸ்.ஆர் – 6, மட்லா, ஹேமில்ட்டன், பால்மன் 579, பி.கே.என், ஆர். பி – 6, எஃப். ஆர் 461, ஆர்யா போன்ற நெல் இரகங்களைப் பயன்படுத்துகின்றனர். நெல்லுடன் உவர்நீர் இறால் வளர்ப்பை மேற்கொள்வதன் மூலம் கடலோரப் பகுதிகளில் கோடை காலங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்களிலிருந்து வருவாய் பெற இயலும்.
மேற்கு வங்கத்தில் நெல்வயலில் மீன் வளர்க்கும் இடங்களில் உப்புத்தன்மை குறைவதாகக் கூறுகின்றனர். கேரளாவின் போக்களிப் பகுதிகளில் கோடைகாலங்களில் உவர் நீர் மீன் வளர்ப்பை மேற்கொள்கின்றனர். இப்பகுதிகளில் கிடைக்கும்
மீன் உற்பத்தி அளவு 300 – 1000 கி.கி வரை வேறுபடுகிறது. இந்த உவர்நீர் மீன் வளர்ப்பு சிறந்த முறையில் பயன்தருவதோடு கூடுதல் வருமானத்தையும் விவசாயிகளுக்கு அளிக்கிறது. இம்முறையில் பெரிய வரி இறால், இந்திய வெள்ளை இறால், கடல் இறால், மெட்டாபீனஸ் மோனோசர்ஸ் போன்ற இனங்கள் வளர்க்கப் படுகின்றன.

தொழில்நுட்ப அளவைகள்

கடல் சார்ந்த பகுதிகள் மிகவும் தாழ்மட்டமாக கடல் மட்டத்திலிருந்து 8 மீ உயரம் வரை மட்டுமே இருக்கும். உப்பு நீருடன் கலப்பதால் மழைநீரும் அதிக நாள் நன்னீராக இருப்பதில்லை. இவ்விறால் வளர்ப்பிற்கு 1 மீ அலை வீச்சு இருக்கும் இடங்கள் இறால் வளர்ப்பிற்கு ஏற்றவை.

மண்ணின் தரம்

வண்டல் களிமண், அல்லது வண்டல் களிமண்பொறை போன்ற மண் வகைகள் மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு ஏற்றது.

நீர்

உவர் நீர் மீன் வளர்ப்பிற்குப் பின் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். ஏனெனில் நீரின் உப்புத் தன்மையைக் குறைக்க இம்மழைநீர் உதவும்.

குளத்தின் அமைப்பு

நெல் வயல்கள் உவர் நீர் மீன் வளர்ப்புக்கு ஏற்றவாறு கரைகள் மண் பூச்சு கொண்டு சற்று உயரமாக அமைக்கப்பட வேண்டும். கரையின் உயரம் அலைகள் எழும் உயரத்தையும், நில அமைப்பையும் பொறுத்து 50 – 100 செ.மீ வரை இருக்கலாம். ஒரு ஹெக்டர் நிலத்தில் இடையில் உள்ள கால்வாயின் அளவு 2 மீ அல்லது 1 மீ இருக்க வேண்டும். கால்வாயில் தோண்டப்படும் மண்ணை கரையை வலுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீர் பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதி

வயலின் ஒரு புறத்தில் அலை வழியே நீர் புக ஏதுவாக மரத்தாலான உட்செலுத்தி அமைக்க வேண்டும். அலைகள் சற்று பெரிதாக வீசும் போது அதிக நீர் உட்புகும். இந்த உட்செலுத்தியின் வழியே பிற மீன்களோ, ஊனுண்ணிகளோ உள்ளே நுழையாதிருக்க வழிகாட்டியைப் பொறுத்த வேண்டும். இதே போல் வயலின் மறுபுறம் ஒரு வெளியேற்று குழாய் (வடிகால் வசதிக்காக) இருக்க வேண்டும். அதில் தேவையானபோது திறந்து மூடிக்கொள்ளுமாறு ஓர் அடைப்பு இருக்க வேண்டும்.

குளத்தின் பராமரிப்பு

வயலை ஒரு பருவத்திற்கு மட்டுமே குளமாகப் பயன்படுத்துகிறோம். நெல் அறுவடை முடிந்த உடன் நீரை வடித்துவிட்டு வயலை வெளியில் காய விட வேண்டும். அமிலத் தன்மையுடைய மண்ணாக இருப்பின் சுண்ணாம்பு இட வேண்டும். வயல் ஓரங்களில் பனை மரம், வைக்கோல் மரத்தின் கிளைகளை ஒடித்து நட்டு நிழற் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணிக்கை

நெல் வயலைத் தயார் செய்த பின் பெரிய வரி இறால் அல்லது இந்திய வெள்ளை இறால் போன்ற மீன்களை ஒரு சதுர அடிக்கு 3 மீன்கள் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.

உணவளித்தல்

இயற்கை உணவுகளை அளிப்பது சிறந்ததே என்றாலும் அது அதிக அளவில் கிடைக்க வாய்ப்பில்லாததாதும், தொடர்ந்து வைத்துப் பாதுகாக்க இயலாததாலும் மேலுணவு மட்டும் அளிக்கப் படுகிறது.

அறுவடைசெய்தல்

கைகளால் பிடித்தோ அல்லது குளத்து நீரை வடித்து விட்டோ மீன்கள் அனைத்தையும் அறுவடை செய்யலாம். சராசரி வளர்ப்பு நாட்கள் 100 – 120 நாட்கள். இதற்குள் இறால்கள் 35 கி எடை வரை வளர்ந்து இருக்கும். பிடிக்கப்பட்ட இறால்களை உடைக்கப்பட்ட ஐஸ் துண்டுகளடங்கிய பெட்டிக்குள் வைத்து சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

போக்களி நிலங்களில் மீன் வளர்ப்பு

கேரள மாநிலத்தில் போக்களி நெல் (நிலங்களில்) வயல்களில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு சுழற்சி முறையில் செய்யப்படுகிறது. இவ்வயல்கள் வெம்பன் நீரால் பாசனம் பெறுகிறது. நீர்ப்பாசனம் அலைகள் மூலம் செயல்படுகிறது. பயிரற்ற காலங்களில் மீன் மற்றும் இறால் வளர்க்கப்படுகின்றன. தென்மேற்குப் பருவ மழையால் பயன்பெறும் காலங்களில் பயிர் விளைவிக்கப்படுகிறது. அறுவடைக்குப் பின் நிலமானது மீன் வளர்ப்புக்காக விடப்படுகிறது. அலைகளின் மூலம் மீன் / இறால்கள் வயல்களில் சேகரிக்கப்படுகிறது. மீன்கள் வளர்ந்து, அறுவடை செய்யும் வரை முறையாகப் பராமரிக்க வேண்டும். நெற்பயிரின் மீதக் கழிவுகள் அழுகி நீரில் இருப்பதால் மீன்களுக்குத் தேவையான அளவு மிதவை உயிரிகள் மற்றும் உணவுத் தாவரங்கள் கிடைக்கின்றன. நீரை வடித்து மீன்களை அறுவடை செய்தபின் மீண்டும் நாற்று நட்டு விடுவர். நல்ல மழை பெய்தால் நீரின் உப்புத் தன்மை குறைந்து விடும்.
  • தோட்டக்கலை – மீன் வளர்ப்பு முறை
குளத்தைச் சுற்றியுள்ள கரைகளில் தோட்டப் பயிர்களை வளர்க்கலாம். குளத்து நீரை மீன் வளர்ப்பிற்கு மட்டுமின்றி பயிர்களின் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் குளத்தினடியில் தேங்கும் வண்டல் மண் பயிர்களுக்கு சிறந்த உரமாகப்பயன்படுகிறது. காய்கறி மற்றும் பழவகைப் பயிர்களுக்கு இது மிகவும் ஏற்றது. இம்முறைக்கு ஏற்றவாறு, குட்டையான, அதிக நிழல் தராத, எப்போதும் பசுமையான, பருவநிலை சார்ந்த, வருமானம் தரக்கூடிய பயிர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். குட்டை பழவகை மரங்களான மா, வாழை, பப்பாளி, தென்னை, எலுமிச்சை போன்றவற்றை வளர்க்கலாம். அதோடு ஊடு பயிர்களாக இஞ்சி, மஞ்சள், மிளகாய், அன்னாசி போன்ற பயிர்களை வளர்க்கலாம். மேலும் பூப்பயிர்களான ரோஜா, மல்லிகை, சம்பங்கி, செண்டு மல்லி, கிலாடியோலஸ் மற்றும் சாமந்தி போன்றவையும் அதிக வருவாயை ஈட்டித்தரும்.
காய்கறிக் கழிவுகளை குளத்தினுள் போட்டுவிடலாம். புல்கெண்டை போன்ற வகை மீன்கள் காய்கறிகளை நன்கு உண்ணும் இவற்றை ஹெக்டருக்கு 1000 மீன்கள் என்ற அளவில் வளர்க்கலாம். சாதாரண கெண்டை இன மீன்கள் குளத்தின் அழுகிய கழிவுகளை உண்ணும். கலப்பின மீன்களில் ரோகு, கட்லா, மிர்கல், புல்கெண்டை வகை மீன்களை முறையே 50:15:20:15 என்ற விகிதத்தில் வளர்க்க வேண்டும். 5000 மீன்கள் வரை ஒரு ஹெக்டரில் வளர்க்கலாம்.
hortfish
தோட்டக்கலை – மீன் வளர்ப்பு முறை
  • காளான் – மீன் வளர்ப்பு முறை
இந்தியாவில் காளான்வளர்ப்பு பிரபலமடைந்து வருகிறது. 3 வகைக் காளான்கள் விற்பனைக்காக வளர்க்கப்படுகின்றன. அவை மொட்டுக்காளான், பால் காளான்,  வோலோரியல்லா, மற்றும் சிப்பிக்காளான் பிளிரோட்டஸ் ஆகும். இவை முறையே யூரோப்பியன் மொட்டுக்காளான் (பால்) வைக்கோல் மற்றும் சிப்பிக்(சிர்லக்) காளான் என அழைக்கப்படுகிறது. காளான் வளர்ப்புக்கு அதிக ஈரப்பதமான தட்பவெப்பம் தேவைப்படுகிறது. எனவே மீன் வளர்ப்புடன் சேர்த்துக் காளான் வளர்ப்பு செய்வது பொருத்தமானதாக இருக்கும்.
காளான் வளர்ப்பிற்கு வைக்கோலை 1 – 2 செ.மீ அளவிற்கு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மீதமுள்ள நீரை அடுத்த நாள் காலையில் வடித்துவிட வேண்டும். கொள்ளுப்பொடி சிறிதளவு (8கி / கி.கி வைக்கோல்) மற்றும் காளான் விதை 30 கி / கி.கி வைக்கோல் என்ற அளவில் கலந்து அதை நீரில் நனைத்த வைக்கோலுடன் அடுக்கடுக்காக அமைக்க வேண்டும். இதை ஒரு பாலிதீன் கவரில் வைத்து 21 – 350 செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட இருட்டறைக்குள் சிறிது வெளிச்சமும் நல்ல காற்றும் நிலவுமாறு வைத்துவிட வேண்டும். 11 – 14 நாட்களில் சிறு சிறு காளான்கள் முளைத்திருக்கும். இந்நிலையில் பாலிதீன் பைகளை வெட்டி விடுதல் வேண்டும். ஆங்காங்கு ஓட்டை விழுமாறு செய்வதால் காளான்கள் பெரிதாக வளர ஏதுவாகும். பின்பு வளர்ச்சியடைந்த காளான்களை அறுவடை செய்து கொண்டு வைக்கோல் கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுத்து விடலாம்.
  • பட்டுப்புழு – மீன் வளர்ப்பு
மொசுக்கொட்டைச் செடியின் இலைகள் பட்டுப் புழுக்களின் உணவாகும். வீணான இறந்த பட்டுப்புழுக்கள் இம்முறையில் மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. பட்டுப்புழுக் கழிவில் உள்ள அங்கக ஊட்டச்சத்துக்களை குளத்தில் வாழும் மிதவைத் தாவரங்கள் எடுத்துக் கொள்கின்றன. சராசரி வெப்பநிலை 15 – 320 செல்சியஸ், ஈரப்பதம் 50 – 90% பட்டுப்புழுவிற்கு மொசுக்கட்டை இலைகளை அளித்தபின் அவை உண்ட மீதத்தைக் கழிவுகளுடன் சேர்த்துக் குளத்தில் கொட்டிவிடலாம். இவ்வாறு செய்வதால் அவை வீணாகாமல் தடுக்கப்படுகிறது. ஒரு ஹெக்டரில் ஆண்டுக்கு 30 டன்கள் மொசுக்கொட்டை இலைகள் உற்பத்தி செய்யலாம். இதில் 16 – 20 டன்கள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றது. 1 ஹெக்டர் பரப்பளவில் பாதி நிலம் மொசுக்கொட்டை சாகுபடிக்கும், மீதப் பகுதியில் குளம் அமைக்கவும் வேண்டும். குளத்தைச் சுற்றி கரையிலும் மேலும் மொசுக்கொட்டையுடன் ஊடுபயிராகவும் காய்கறிகளைப் பயிர் செய்யலாம். இதனால் 3.75 டன்கள் வரை காய்கறிகளைக் கூடுதலாகப் பெறலாம்.
இதே போல் கால்நடையுடன் மீன் வளர்ப்பு, பன்றி மற்றும் மீன் வளர்ப்பு, கோழியுடன் மீன் வளர்ப்பு, வாத்து மீன் வளர்ப்பு, ஆடு மீன் வளர்ப்பு, முயல் மீன் வளர்ப்பு போன்ற பல முறைகளைப் பின்பற்றலாம். இம்முறையில் வாத்து, கோழி, பன்றி மற்றும் கால்நடையின் கழிவுகள் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் மீன்களுக்கான உணவு உரமிடுதலின் செலவு குறைவதோடு பயன்படுத்தும் இடத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். இவ்வாறு கால்நடைகளுடன் மீன் வளர்ப்பு பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக கால்நடை – மீன் வளர்ப்பில் கருதப்படுவது ஊட்டச்சத்துக்கள். குறிப்பாக நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற மீன் உணவில் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் கால்நடை கழிவுகளின் மூலம் கிடைத்துவிடுவதால் செயற்கை உரத்திற்கான தேவை மிகக் குறைவு. அதோடு விலங்கு / கால்நடை ஆய்வுக்கூடத்தின் கழிவுகள் அசைவ மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. இவ்வாறு கால்நடை வளர்ப்பு மட்டுமல்லாது அதன் பிற (பதப்படுத்தல்) முறைகளின் கழிவுகளும் மீன்களுக்கு உணவாகின்றன.
குளம் போன்ற (நீர்த்தேக்க) மீன் வளர்ப்பில் குறிப்பிட்ட அளவே கழிவுகளைப் பயன்படுத்த இயலும். ஆதலால் மீன்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர வாய்ப்பில்லை. இவ்வாறு மீன்கள் கழிவுகளை உண்ணும் உயிரியல் முறை வெப்ப நிலையைச் சார்ந்தது. இதற்கான சராசரி வெப்ப நிலை 25 – லிருந்து 320 செல்சியஸிற்குள் இருக்க வேண்டும். பருவநிலையைப் பொறுத்து இது மாறுபடலாம். இந்தக் கழிவுகளை நேரடியாக மீன்களுக்கு அளிப்பதைவிட மண்புழு போன்ற உயிரிகளுக்கு உணவாகக் கொடுத்து அப்புழுக்களை மீன்களுக்கு அளித்தால் சிறந்த விலங்குப் புரதம் கிடைக்க ஏதுவாகும். மாமிசக் கழிவுகள், இரத்தம், எலும்புத் துகள்கள் போன்றவையும் சிறந்த உணவுகள். இவற்றை அளிப்பதால் ஊனுண்ணி மீன்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம். இதேபோல் தாவர உண்ணிகளுக்கும், வாத்து களைகள், அசோலா போன்றவை சிறந்ததீனியாகும்.
serfish
பட்டுப்புழு – மீன் வளர்ப்பு
கால்நடை – மீன் வளர்ப்பு
கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு பல நாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. மாட்டின் சானத்தை பயன்படுத்தி மீன் வளர்ப்பது ஹாங்காங், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. மீன் குளத்திற்கு அருகிலேயே கால்நடைத் தொழுவமும், சாண எரிவாயுக் கலமும் அமைக்கப்படுகிறது. மாட்டுத் தொழுவத்திலிருந்து ஒரு நல்ல பசுமாடு வருடம் ஒன்றுக்கு 4000 – 5000 கிகி சாணமும், 3500 – 4000 லிட்டர் சிறுநீரும் வெளியேற்றுகிறது. மாட்டுச் சானம் மெதுவாகவே மட்குவதால் (6 செ.மீ / நிமிடம்) மீன்கள் அதை உண்டு செரிக்க ஏதுவாக இருக்கும். மேலும் இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் குளத்தில் உள்ள பிற மிதவை உயிரிகளுக்கும் உணவாகிறது. சாண எரிவாயுக் கலத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குளத்தினுள் விடப்படுகிறது. 1 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு 5 – 6 பசுக்கள் போதுமான உணவை வழங்கிவிடும்.
மாடுகளுக்கு 7000 – 8000 கி.கி பசுந்தீவனம் ஆண்டொன்றிற்கு தேவைப்படும். தீவனக் கழிவுகளையும் ‘புல்கெண்டை’ இன மீன்கள் உண்பதால் 2,500 கி.கி வரை வீணாகாமல் தடுக்கப்படுகிறது. வருடத்திற்கு 20000 – 30000 கி.கி சாண எரிவாயுக் கழிவு கிடைக்கும். இதன் மூலம் 4000 கி.கி மீன்களை உற்பத்தி செய்ய முடியும்.
  • பன்றி – மீன் வளர்ப்பு
சீனா, தைவான், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் இம்முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. பன்றிகளுக்கு உணவாக சமையல் கழிவுகள் நீர்த்தாவரங்கள், பயிர்க்கழிவுகள் போன்றவற்றை கொடுக்கலாம். 30 -35 பன்றிகளின் கழிவு 1 டன் அம்மோனியம் சல்பேட்டிற்குச் சமம். அயல்நாட்டு இனங்களான வெள்ளை யார்க்ஷயர், மேன்டிரேஸ், ஹேம்ப்ஸயர் போன்றவற்றிற்கு 3 – 4மீ2 அளவு இடம் தேவைப்படும். சோளம், நிலக்கடலை, கோதுமை – 2 மி, மீன்துகள், தாதுக்கலவை போன்றவை அடர்தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன.
இட வசதிக்கேற்ப ஒரே குளமாகவோ அல்லது இரண்டு குளங்களாகவோ அமைக்கலாம். பன்றிக்கழிவிலிருந்து வீட்டுத் தேவைக்குத் தேவையான சான எரிவாயுவைத் தயாரித்துக் கொள்ள முடியும். சிறுநீரைக் குளத்திற்கு எடுத்துச்செல்ல ஒரு சிறிய கால்வாய் போன்று அமைக்க வேண்டும். சானத்தை ஆக்ஸிஜனேற்ற தொட்டிக்குள் செலுத்தி சிறிது மட்க வைத்த பின்பே குளத்தில் போட வேண்டும். அதன் சூடு தனிந்து மட்கும் வரை சில நாட்கள் குவித்து வைத்துப் பின்பு நீரில் கரைத்து குளத்தினுள் கலக்கச் செய்யலாம்.
பன்றிச் சானத்தில் 70 சதம் மீன்களால் எளிதில் எடுத்துக் கொள்ள இயலும். மீதமுள்ள 30 சதமும் சாதாரண கெண்டை, திலேப்பிக் கெண்டைபோன்ற மீன்கள் உண்டுவிடும். ஒரு ஹெக்டர் பரப்பளவு கொண்ட மீன் குளத்திற்கு 60 -100 பன்றிகள் உணவளிக்க போதுமானது. மீன் வளர்ப்பிற்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக 1 டன் உரம் தேவைப்படுகிறது.
புல் கெண்டை, சாதாரண கெண்டை, வெள்ளி கெண்டை (1:1:2) போன்ற மீன் இனங்கள் பன்றி – மீன் ஒருங்கிணைந்த வளர்ப்புக்கு ஏற்றவை.
பன்றிகள் 6 மாதத்தில் 60 -70 கிலோ எடையுடன் முதிர்ச்சி பெற்றுவிடும். ஒவ்வொரு ஈற்றிலும் 6 – 12 குட்டிகளை ஈனும். 6-8 மாதங்களில் பருவ வயதை அடைந்துவிடும். மீன்கள் 1 வருடத்தில் வளர்ந்து விற்பனைக்குத் தயாராகி விடும். நன்கு வளர்ந்துள்ள பெரிய அளவு மீன்களைப் பிடித்து விற்பனை செய்ய வேண்டும். 12 மாதங்களுக்குப் பின் அனைத்து மீன்களையும் அறுவடை செய்து விற்றுவிடலாம்.
pigfish
பன்றி – மீன் வளர்ப்பு
கோழி – மீன் வளர்ப்பு
கோழியின் கழிவில் மிகுந்துள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் மீன்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள். கோழிக் கொட்டகையை குளத்தின் மீது மூங்கில் கம்பங்களைக் கொண்டு அமைத்தால், கோழிகளின் கழிவுகள் நேரே குளத்தினுள் விழுந்து மட்கி மீன்களுக்கு இரையாகும். இம்முறையில் 4500 – 5000 கி.கி மீன்கள் கிடைக்கும்.
தரமான கோழி இனங்களைத் தேர்ந்தெடுத்து சரியான முறையில் கோழிப்பண்ணை அமைத்து தீவனமளித்துப் பராமரித்தால் இம்முறை மிகவும் இலாபகரமானதாக அமையும். தீவிர வளர்ப்பு முறையில் கோழிகளை வளர்த்தல் வேண்டும். இதற்கு ஆழ்கூள முறை சிறந்தது. உலர்ந்த இலைகள் மரத்துகள்கள், நிலக்கடலையின் தொழிகள் சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வைக்கோல் போன்றவற்றை அடர்த்தியாகப் போட்டு ஆழ்கூளம் தயார் செய்யப்படுகிறது.
இம்முறை வளர்ப்பிற்கு லெக்ஹார்ன் (அ) ரோட் ஐலேண்ட் போன்ற இனங்கள் ஏற்றவை. ஒரு ஹெக்டர் பரப்பளவில் 2500 கோழிக் குஞ்சுகளை வளர்க்கலாம். மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கேற்றவாறு கோழிக் குஞ்சுகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். முட்டையிடும் கோழிகளாக இருப்பின் 0 – 8 வாரங்கள் வரை குஞ்சுத்தீனி அளிக்க வேண்டும். பின்பு 8 – 20 வாரங்கள் வரை வளரும் கோழிகளுக்கேற்ற தீனியும் 20 வாரங்களுக்கு மேல் முழுமையான தீவனமும் அளிக்க வேண்டும்.
இதுவே இறைச்சிக் கோழியாக இருப்பின் 4 வாரங்கள் வரை குஞ்சுத்தீவனமும் பின்பு 6 வது வாரம் வரை முழுத்தீவனமும் கொடுத்தால் போதுமானது. கோழிக் கொட்டகையின் ஆழ்கூளத்தை நாளொன்றுக்கு 30 – 35 கி.கி என்ற வீதம் குளத்தில் விழச் செய்யப்படுகிறது. ஒரு வளர்ச்சியடைந்த கோழியானது ஓராண்டிற்கு 25 கி.கி வரை மட்கிய கழிவை வெளியேற்றுகிறது. ஒரு ஹெக்டர் குளத்திற்கு 1000 பறவைகளின் கழிவு போதுமானது.
இம்முறையின் மூலம் ஆண்டிற்கு 3000 – 4000 கி.கி மீன்களைப் பெறலாம். 9000 -10000 கோழி முட்டைகளையும் 2500 கி.கி இறைச்சியையும் பெற முடியும்.திலேப்பிக்கெண்டை, சாதாரண கெண்டை, விரால் போன்ற மீன் குஞ்சுகளை 20000 / ஹெக்டர் என்ற எண்ணிக்கையில் வளர்க்கலாம். அதனுடன் 4000 கோழிக்குஞ்சுகள் / ஹெக்டர் என்ற அளவில் வளர்க்க முடியும். எந்த ஒரு செயற்கை உரமும் இடத் தேவையில்லை அல்லது 5000 பெரிய நன்னீர் இறால் குஞ்சுகளையும் (மேக்ரோபியம் ரோசன்பெர்ஜி) மற்றும் 1500 வெள்ளி கெண்டை மீன்களை சேர்த்து 1 ஹெக்டர் குளத்தில் வளர்த்தால் 4 மாதங்களில் 600 கி.கி இறால் மீன்களை அறுவடை செய்யலாம்.
chickfish
கோழி – மீன் வளர்ப்பு
வாத்து – மீன் வளர்ப்பு
சீனா, ஹாங்கேரி, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் வாத்துடன் மீன் வளர்க்கும் முறை முக்கியமான ஒன்றாகும். மீன் வளர்க்கும் குளமானது குறிப்பிட்ட நீர்த் தாவரங்கள் மற்றும் விலங்குகள் கொண்ட பாதுகாப்பான இடம். ஆதலால் வாத்துகளுக்கு எந்த வித நோயத்தொற்று பயமும் இருப்பதில்லை. அதற்குக் கைமாறாக வாத்துகள் மீன்களுக்கு ஊடுவிளைவிக்கும் தவளையின் குஞ்சுகள், தலைப்பிரட்டை, தட்டான் போன்றவற்றை உண்டுவிடுகிறது. மேலும் வாத்து கழிவுகள் நேராக குளத்தினுள் விழச்செய்யப்படுகின்றன. இது மீன்களுக்கு உணவாகிறது. மேலும் இதில் இரு நன்மைகள் அடங்கி உள்ளன.
ducfish
வாத்து – மீன் வளர்ப்பு
  • உரமளிக்கும் செலவு குறைவு
  • ஆட்கூலி மிச்சப்படுத்தப்படுகிறது
இம்முறை இந்தியாவின் மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், பீஹார், ஒரிசா, திரிபுரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. இதற்கென ‘இந்திய ஓடும் வாத்து’ இனங்கள் வளர்க்கப்படுகிறது. வாத்துகளின் கழிவில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளதால் வாத்துகள் ‘நடமாடும் உர இயந்திரங்கள்’ எனப்படுகிறது.
இம்முறையில் மீன் மற்றும் வாத்துகளுக்குத் தேவையான விலங்குப் புரதம் தேவையான அளவு கிடைக்கிறது. வாத்துகளின் கழிவில் 25 விழுக்காடு அங்ககப்பொருட்களும் 20 விழுக்காடு அனங்ககப் பொருட்களும் கார்பன், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன், கால்சியம் போன்ற சத்துக்களும் மிகுந்துள்ளன.
வாத்துக்களுக்கு நீரின் மேலே கொட்டகை அமைத்தோ அல்லது அவற்றை நீரிலேயே சுதந்திரமாக திரிய விட்டோ வளர்க்கலாம். மிதக்கும் கொட்டில் மூங்கில் ஆல் ஆனதாகவோ சிறு இடைவெளியுடன் வாத்து கழிவுகள் நீரினுள் விழுமாறு அமைக்கப்பட வேண்டும். 1 மீ2 இடத்தினுள் 15 – 20 வாத்துகள் இருக்குமாறு செய்யலாம். கொட்டிலில் அடைப்பதை விட திறந்த வெளி முறையே சிறந்தது. வாத்துக்களின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து 2 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ந்த வாத்துகளை விற்றுவிட்டுப் புதிய குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். 100 – 3000 / ஹெக்டர் என்ற எண்ணிக்கையில் வாத்துக்களைப் பராமரிக்கலாம்.
  • வாத்துகளுடன் வளர்ப்பதற்கு 10 செ.மீ அளவிற்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் வாத்துகள் மீன் குஞ்சுகளை விழுங்கிவிடக்கூடும் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையும் வாத்து எண்ணிக்கைக்கும் குளத்தின் அளவிற்கும் ஏற்றவாறு அமையும். நைட்ரஜன் மிகுந்துள்ள வாத்துக் கழிவுகள் நீர் வாழ் தாவர மற்றும் விலங்கு வளர்ச்சியை அதிகரிக்கும். இவற்றை விரும்பி உண்ணும். வெள்ளி கெண்டை, கட்லா, சாதாரண கெண்டை போன்ற மீன் வகைகள் இம்முறைக்கு ஏற்றவை. ஒரு ஹெக்டரில் 20000 விரலளவு மீன் குஞ்சுகளை விட்டால் ஓராண்டு இறுதியில் 3000 – 4000 கி.கி மீன்களை அறுவடை செய்யலாம். இது தவிர வாத்து முட்டைகள் மற்றும் இறைச்சியும் ஒரு கணிசமான இலாபத்தைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.
தகவல்:
http://www.vuatkerala.ofile:///E:/Animal%20Husbandry/TNAU-Agri%20Tech%20Portal/ani_chik_grower&layer%20mgt.html
http://www.vuatkerala.org/static/eng/advisory/fisheries/culture_fisheries/integrated_farming/introduction.htm.
நன்றி – http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_ifs_ta.html

Recent Posts

பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...!

பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...! பொதுவாக மடிக்கணினிகள் ஒரு விண்டோஸ் அல்லது மேக்புக் எதுவாக இருப்பினும்...