மாடு, ஆடு, கோழி கழிவிலிருந்து எரிவாயு…
வினை விதைப்பவன் வினை அறுப்பான்’ என்பது போல,
தனியார்மயத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா. பெட்ரோல்
உள்ளிட்ட அத்தியாவசியத் துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய
பிறகு, மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஏறுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணில் பறக்கிறது. ‘ஆண்டுக்கு ஒன்பது
சிலிண்டர்கள் மட்டுமே மானியத்தில் கொடுப்போம்…’ என கறார் காட்டுகிறது,
அரசு. ‘இதை எப்படி சமாளிப்பது?’ எனத் தெரியாமல், எரிவாயு இல்லாமலே
எரிகிறது, சாமானியனின் வயிறு.
இந்நிலையில், ”விலைவாசியைப் பற்றி கவலைப்படுவதைவிட,
அதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசிப்பதுதான் நல்லது. வீடுகளில் ஆடு, மாடு
வைத்திருப்பவர்கள்… தமிழக அரசின் விலையில்லா ஆடு, மாடுகளை வாங்கியிருக்கும்
ஏழை நடுத்தர மக்கள்… அந்தக் கால்நடைகளின் கழிவுகள் மூலமாகவே சமையல்
எரிவாயுப் பிரச்னையைத் தீர்க்க முடியும்” என்கிறார், கன்னியாகுமரியிலுள்ள
விவேகானந்தா கேந்திராவின் இயற்கை வள அபிவிருத்தி மையத்தின் திட்ட
ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன்.
தொடர்ந்த ராமகிருஷ்ணன், ”சமையலறைக் கழிவுகளில்
இருந்து எரிவாயு தயாரிக்க உதவும் வகையில், ‘சக்தி சுரபி’ என்ற பெயரில் ஒரு
கலனை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதைப் பற்றி, ‘பசுமை விகடன்’
மற்றும் ‘அவள் விகடன்’ இதழ்களிலும் எழுதியிருக்கிறீர்கள்.
அதன் தொடர்ச்சியாக ஒரு மாடு, நான்கைந்து ஆடுகள்,
கொஞ்சம் கோழிகள் வைத்திருக்கும் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில்,
புதிதாக ஒரு கலனை வடிவமைத்துள்ளோம். நான்கு அடி உயரம், மூன்றரை அடி விட்டம்
கொண்ட இந்தக் கலனில், உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயு
சேகரிப்பான்(இந்த வாயு சேகரிப்பான், வாயு சேர்ந்த பிறகு மிதக்கும். இதை
மிதக்கும் கலன் என்றும் சொல்வார்கள்.) ஸ்லர்ரி (சாணக்கழிவுக் குழம்பு)
வெளியேறும் பகுதி, உற்பத்தியான வாயுவை வெளியே கொண்டு செல்லும் குழாய் என
மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும்.
இரண்டு வாரத்தில் எரிவாயு!
முதல் முறை உற்பத்தி தொடங்கும்போது… 400 கிலோ
சாணத்தை, 400 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்துவிட வேண்டும். இந்த அளவு
கரைசல் எப்பொழுதுமே கலனில் இருக்க வேண்டும். இந்தக் கரைசலுக்கு
‘ஸ்டார்ட்டர் கரைசல்’ என்று பெயர். இக்கரைசலை உட்செலுத்தும் குழாயில் புனல்
மூலம் ஊற்றி, மூடிவிட வேண்டும். சாணத்தில் வைக்கோல் முதலிய மிதக்கும்
குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இந்தக் கரைசலில்
‘அனோரபிக்’ பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், அந்தக் கலனில்
இருக்கும் மிதக்கும் கலன் ஒருவாரத்தில் படிப்படியாக உயரத் தொடங்கும்.
எரிவாயு உற்பத்தியாக உற்பத்தியாக கலன் உயரும். இரண்டு
வாரத்தில் சாண எரிவாயு முழுவதுமாக உற்பத்தியாகிவிடும். உற்பத்தியான
எரிவாயு, வாயு வெளிச்செல்லும் குழாய் மூலம் அடுப்பை அடையும். கலன் அரை அடி
உயர்ந்ததுமே, அடுப்பில் தீ பற்ற வைத்து சோதித்துப் பார்க்கலாம். ஆனால்,
முதல் 5 நாட்கள் வரை உற்பத்தியாகும் வாயுவில், துர்நாற்றம் இருக்கும்
என்பதால், அதை அப்படியே வெளியேற்றிவிட வேண்டும். அதன் பிறகு பயன்படுத்த
ஆரம்பிக்கலாம்.
தொடர்ந்து, தினமும் கிடைக்கும் சாணத்தில், சம அளவு
தண்ணீரையும் சேர்த்து, கலனுக்குள் ஊற்ற வேண்டும். எரிவாயு உற்பத்திக்குப்
பிறகு, தேவையற்ற கழிவு (ஸ்லர்ரி) தானாக வெளியேறி விடும். இதை, பஞ்சகவ்யா,
ஜீவாமிர்தம், அசோலா வளர்ப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம். நேரடி உயிர்
உரமாகவும் பயன்படுத்தலாம்.
இக்கலனில், மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோழி
எரு என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விலையில்லா ஆடுகள் அதிகரித்து
வருவதால், அவற்றின் கழிவுகளை முறையாக பயன்படுத்தினால், எரிவாயுச் செலவை
மிச்சப்படுத்துவதோடு, ஊட்டமேற்றிய உரமும் போனஸாக கிடைக்கும். இதில், 15
ஆடுகளின் கழிவை இட முடியும். அதேபோல 50 கோழிகளின் கழிவை இதில் இட முடியும்.
மாடுகள் அதிகமாக இருந்தால்… சாண எரிவாயுக் கலன் மூலமாக, மின்சார
உற்பத்தியும் செய்யலாம்” என்ற ராமகிருஷ்ணன்,
21 ஆயிரம் ரூபாய்!
”இதை
எங்கள் மையத்தில் தயாரித்து விற்பனை செய்கிறோம். தற்போது ஃபைபரால்
செய்யப்பட்ட கலன் மட்டுமே அமைத்துக் கொடுக்கிறோம். கலன் மற்றும் சாண
எரிவாயு அடுப்பு ஆகியவற்றுக்கு 19 ஆயிரம் ரூபாயும், எரிவாயுக் குழாய்
இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து மொத்தம் 21 ஆயிரம் ரூபாய்
செலவாகும். ஃபைபர் கலன் என்பதால், செலவு சற்று கூடுதலாக இருக்கிறது.
பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் தொட்டிகள் மூலம் அமைத்தால் செலவு குறையும்.
அதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில்
கொண்டு செல்லலாம். வீட்டுக்கு அருகே சாணத்தை குவித்து வைத்தால், ஈ,
கொசுத்தொல்லை இருக்கும். அதற்கு பதிலாக, எரிவாயுக் கலனை அமைப்பதன் மூலம்,
சமையலுக்குத் தேவையான வாயு கிடைப்பதோடு… கூடுதல் பலனாக… ஊட்டமேற்றப்பட்ட
உரமும் கிடைக்கும். வயல்வெளிப் பயிர்கள், வீட்டுத் தோட்டப்
பயிர்களுக்கெல்லாம் இது அருமையான உரம்” என்று சொன்னார்.
தொடர்புக்கு, ராமகிருஷ்ணன்,
செல்போன்: 94426-53975
செல்போன்: 94426-53975
http://eankankal.blogspot.co.uk/2013/12/blog-post_2912.html
No comments:
Post a Comment